5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளிடம் ஒரு தந்தையின் உரிமையை மறுக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பெங்களூரில் 7வயது சிறுமிக்கு தந்தையும் பாதுகாப்பு வழங்கலாம் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறுமியின் தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விஸ்வஜித் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாயின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, குழந்தைக்கு 5 வயதுக்கு மேல் இருந்தால், குழந்தையின் நலன் கருதி தந்தையின் உரிமையை மறுக்க முடியாது என்று தெரிவித்தது. இயற்கையாகவே குழந்தையின் பாதுகாவலராக தந்தை இருப்பதால், தாயை போலவே குழந்தையை கவனித்து கொள்ளும் உரிமை தந்தைக்கு உண்டு என்றும் மேலும், வருடாந்திர சோதனைக்குப் பிறகு குழந்தையை தந்தையின் பாதுகாப்பில் இருக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ஞாயிற்றுக்கிழமைகள், பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து முக்கிய நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தையை தந்தை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினர்