பள்ளி ஒன்றில் ஒரே ஒரு மாணவனுக்கு, ஒரே ஒரு ஆசிரியர் இரண்டு ஆண்டுகளாக பாடம் நடத்தி வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் 150 பேர் வசித்து வரும் நிலையில், அக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கார்த்திக் ஷெகோக்கர் என்ற 3ஆம் வகுப்பு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். அவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து பள்ளிக்கு வருகை தருகிறார். காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடுகின்றனர். அதன்பின்னர் வகுப்பு தொடங்கும்.

இதுபற்றி ஆசிரியர் கிஷோர் மங்கார் கூறுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். பள்ளியில் நான் மட்டுமே ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் நான் கற்றுத் தருகிறேன். அரசால் வழங்கப்படும் மதிய உணவு உள்பட அனைத்து வசதிகளும் அந்த மாணவருக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். ஒரு மாணவர், ஒரு ஆசிரியரை வைத்துக்கொண்டு பள்ளியை தொடர்ந்து சிறப்பாக நடப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டுகின்றனர்.