ஒடிசா மாநிலத்தில் 549 கிளைகளுடன் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது ஒடிசா கிராமிய வங்கி. அங்குள்ள கேந்திரபாரா நகரில் இருக்கும் இந்த வங்கிக் கிளையின் வாடிக்கையாளர்கள் பலரது கணக்குகளில் திடீரெனப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் யார் பணத்தை போட்டார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
இருப்பினும், தங்களது கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள், வெள்ளிக்கிழமை காலை அந்த வங்கி திறந்ததும் பணத்தை எடுக்க விரைந்ததால் அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் மிரண்டுபோன வங்கிக் கிளையின் மேலாளர், 300 கணக்குகளைச் சோதித்துப் பார்த்ததாகக் கூறினார்.
“பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய முயன்று வருகிறோம். வாடிக்கையாளர்களின் கணக்குகளில் யார், எதற்காகப் பணம் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாகப் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்” என்று அவர் கூறினார். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.30,000இல் இருந்து ரூ.2 லட்சம் வரை போடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.