உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது. இதனால் கொரோனா தொற்று மீண்டும் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் ஆகியோருக்கு எளிதில் கொரோனா தொற்று ஏற்படும். ஆனால் அது போன்ற நபர்களுக்கும் தடுப்பூசி பாதுகாப்பு தரும்.
தற்பொழுது 3 அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய பிறகும் கூட, சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகவும், தடுப்பூசிகள் போட்ட பிறகும் அவர்களுக்கு ஆண்டிபாடிகள் உருவாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
புதிய வகை வைரஸ் ;
உலக அளவில் தற்போது இஸ்ரேல், டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க சுகாதாரத்துறையும் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. BA.2.86 என்ற இந்த புதிய வகை கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பை கவனமாக ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய உருமாறிய வைரஸை தவிர்த்து 10 கொரோனா வகைகளையும் அதன் தோற்றத்தையும் உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.