பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே உலகக்கோப்பை தொடரின் 12 வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 12வது லீக் போட்டு இன்று நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் நெதர்லாந்து மற்றும் இலங்கையை பாகிஸ்தான் தோற்கடித்துள்ளது. இந்தநிலையில், ஹாட்ருக் வெற்றியை பெரும் முனைப்பில் இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் காரணமாக, முதல் இரண்டு லீக் போட்டிகளில் கலந்துகொள்ளாத சுப்மன் கில், இன்றைய போட்டியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அணியில் இடம்பெறுவதற்கு 99 சதவீத வாய்ப்பு இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதேநேரம், பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்ற 47 போட்டிகளில் பாகிஸ்தான் 28 போட்டிகளிலும், இந்தியா 19 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ளன. அதேநேரம், உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிவாகை சூடியுள்ளது. இந்த சாதனையை தொடரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.