ஆந்திர மாநிலம் சித்தூர் கொங்காரெட்டிபள்ளியை அடுத்த வித்யாநகர் காலனியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (46). இவர், உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஹேமலதா (43). இவர், சித்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வேணு (21), உதய் (18), உத்தேஷ் (18) என 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஹேமலதாவின் நடத்தை மீது டில்லிபாபுவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. மனைவி ஹேமலதாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்து அவரை டில்லிபாபு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ஹேமலதா வெளியில் இருந்து குடிநீர் எடுத்து வந்தார். அப்போது அங்கு வந்த டில்லிபாபு, மனைவி ஹேமலதாவிடம் தகராறு செய்துள்ளார். அவர்களை அவர்களது மகன்கள் உதய், உத்தேஷ் இருவரும் தடுத்துள்ளனர். ஆனாலும், நீண்ட நேரமாக ரகளை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த டில்லிபாபு, தான் எடுத்து வந்த கத்தியால் ஹேமலதாவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஹேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயின் சடலத்தை பார்த்து மகன்கள் கதறி அழுதனர். ஆனால், இதை கண்டுகொள்ளாமல் டில்லிபாபு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஹேமலதாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டில்லிபாபுவை தேடி வருகின்றனர்.