திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று ராமநாதபுரம் – கடலூர் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சேலத்தில் இளைஞரணி மாநாடு வெற்றி மாநாடாக அமைந்தது. அதன் வெற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலுக்கு மக்களவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதில், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
2019 நாடாளுமன்ற தேர்தலை விட 2024 நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியம். மாநிலத்துக்கான நிதியை கேட்டால் மத்திய பாஜக அரசு கொடுப்பதில்லை. ஆனாலும், தமிழ்நாடு அரசு வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறது. இந்த முறை திமுக தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வர வேண்டும். எதிர்கட்சியாக இருக்கும் போதே 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றோம். இப்போது திமுக ஆளும் கட்சி. எனவே, கடந்த மக்களவைத் தேர்தலை விட ஒரு சதவீத வாக்குகள் கூட குறைந்து விடக்கூடாது. மக்களவைத் தேர்தல் வெற்றி தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளம். கலைஞர் தான் உங்கள் தொகுதியில் வேட்பாளர் என்று மனதில் வைத்து தேர்தல் பணியாற்றி வேண்டும்” என்று பேசினார்.