உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேமுதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”அதிமுகவுடன் தவெக கூட்டணி குறித்து விஜய்யிடம் கேளுங்கள். அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேமுதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் முக்கியம். இங்கு வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது. ஒருவர் விரும்பினால் மட்டுமே அந்த மொழியை கற்க முடியும் என்றார். அதனைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரி குறித்து பேசியவர், ’நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போல் பேசத் தெரியாமல் பேசி கஸ்தூரி மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் என தெரிவித்தார்.
பெண்களை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது. ஆனால், எத்தனையோ தலைவர்கள் மோசமாக பேசியுள்ளனர். அவர்களையெல்லாம் ஏன் கைது செய்யவில்லை..? தீவிரவாதியை போன்று ஹைதராபாத்திற்கு சென்று கஸ்தூரியை போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஒரு பெண்ணான அவருக்கு இது போன்று நடந்துள்ளது அநியாயம்” என்று தெரிவித்தார்.