திமுக தலைமையிலான அரசு வீண் அரசியல் செய்துகொண்டு மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக் கொள்வதாக சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகாலங்களில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால், திமுக அரசு இந்த விஷயத்தில் வீண் அரசியல் செய்துகொண்டு மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக்கொள்கிறது. தமிழகத்திற்கான நிதியை பெற தேவையான வழிமுறைகளை கண்டறிந்து, அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை என சாமானிய மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறிவிட்டது. இதையெல்லாம் பற்றி கவலைப் படாமல், திமுக அரசு அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. மாயத் தோற்றத்தை உருவாக்குவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள். ஆனால், இதன் மூலம் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவது இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தங்கள் வசம் கொண்டுள்ள திமுக, அரசியல் செய்வதை விட்டுவிட்டு, பாராளுமன்றத்தில் நமது மாநிலத்தின் தேவைகளை எடுத்து கூறி மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியினை பெற்றுத்தர வேண்டும். மாணவச்செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு தேவையான கல்வி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.