தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கேற்ப, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், இந்த குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் தான், திண்டுக்கல்லில் பெற்ற மகனை தந்தையே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காவிரிசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் ரஞ்சித் குமார். இந்நிலையில் மகன் ரஞ்சித்குமார் தனது வீட்டில் சண்டை சேவலை வளர்த்து வந்துள்ளார். அந்த சேவலை தந்தை முணியாண்டி மாற்று இடத்தில் கட்டி வைத்துள்ளார்.
இதனால், ரஞ்சித் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த தந்தை முணியாண்டி, வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகன் என்றும் பாராமல், வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பத்தினர் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம், மகனை வெட்டிக்கொன்ற தந்தை முணியாண்டியை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.