இந்தியர்களுக்கான சரிவிகித உணவு பற்றிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ளது.
நோயில்லா வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு என்பது அவசியமான ஒன்று. ஆனால் நாம் உடலுக்கு சக்தியளிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் நாவின் ருசிக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்வதால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறோம்.
குறிப்பாக நீரிழிவு நோய், இருதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் வயது வித்தியாசமில்லாமல் நம்மை பாதிக்கிறது. நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து என ஒவ்வொரு ஊட்டச்சத்தும் உடலின் நலத்திற்கு தேவை. இப்படி அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் எடுப்பதும் தான் ஆற்றல் மிக்க உடலுக்கு அடித்தளமாகும்.
இந்தியர்களுக்கான சரிவிகித உணவு பற்றிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் 148 பக்கங்கள் கொண்ட இந்த வழிகாட்டுதலில் 17 வகையான அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் முக்கிய சாராம்சங்களைப் பார்ப்போம்…
அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், Non communicable disease என்கிற தொற்றா நோய்களைத் தடுப்பதற்காவும் சரிவிகித உணவுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்தியர்களுக்கு உண்டாகும் நோய்களில் சுமார் 56.4 சதவிகித நோய்கள் தவறான உணவுப்பழக்கங்களாலேயே உருவாகின்றன.
உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களை சமையல் எண்ணெய்களின் வழியே பெற்றுக் கொள்வதைவிட நட்ஸ், எண்ணெய் வித்துகள், கடல் உணவுகளின் வழியே பெற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுமுறையும் போதுமான உடல்ரீதியான நடவடிக்கைகளும் இதயநோய்களையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கணிசமான அளவில் குறைக்கும்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியானது இளவயது/திடீர் மரணங்களையும் கணிசமான அளவு தவிர்க்கும். வாழ்க்கைமுறை மாற்றங்களால் வருகிற டைப் 2 (Type 2) டயாபட்டீஸ் என்கிற இரண்டாம் வகை நீரிழிவினையும் ஒழுங்கான வாழ்க்கை முறையால் தடுக்க முடியும்.
தவறான உணவுப்பழக்கத்துடன் உடல் இயக்கமின்மையும் இன்று கூட்டாக சேர்ந்து கொள்கிறது. நம் ஆரோக்கியத்தின் சீர்கேட்டுக்குக் இதுவே காரணமாக உள்ளது. மேலும், நல்ல உணவுகளைத் தேடி உண்ணாமையும், நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளும், உடல் பருமனும் அதிக பிரச்னைகளை உருவாக்கியுள்ளன.
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் நம் தினசரி வாழ்வில் சாதாரணமாகிவிட்டன. நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 கிராம் சர்க்கரையே இந்தியர்களுக்குப் போதுமானது. உடற்பயிற்சி செய்கிறவர்கள், தங்களது கட்டான உடலுக்காக புரோட்டீன் சப்ளிமென்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக புரோட்டீன் சப்ளிமென்டுகளைப் பயன்படுத்தும்போது எலும்புகளின் தாது இழப்பையும், சிறுநீரக நோய்களையும் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரலாம்.
நாம் உட்கொள்ளும் உணவின் ஆற்றலில் (Energy) சராசரியாக 5 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே சர்க்கரை இருக்க வேண்டும். தானியங்களிடமிருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட்டின் அளவு 45 சதவிகித கலோரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நம் புரத உணவின் தேவை 15 சதவிகிதம். இதற்கு மீதம் உள்ள கலோரி அளவுகள் நட்ஸ், பழங்கள், காய்கறிகளிடமிருந்து கிடைக்க வேண்டும். கொழுப்பு அளவானது மொத்த உணவின் அளவில் 30 சதவிகிதம் இருக்க வேண்டும்.
தசைகளின் கட்டமைப்புக்கு மிகவும் சிறிய அளவிலேயே சப்ளிமென்ட்டுகள் உதவுகின்றன என்று பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் எடைக்கு 1.6 கிராம் புரதமே போதுமானது. இதில் உங்களது உடல் எடையைப் பொறுத்து இதன் அளவைத் தீர்மானிக்கலாம். இந்த 1.6 கிராம் என்ற ஒரு கிலோவின் அளவைத் தாண்டிய அதிக புரதம் உடலுக்குத் தீங்கினையே விளைவிக்கும். எனவே, புரோட்டீன் சப்ளிமென்ட்டுகளைத் தவிர்த்துவிடுங்கள்