அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேட்டியளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டமானது சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி, பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “வரும் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். மொத்தம் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என பின்னர் தெரிவிக்கப்படும். இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வீட்டில் அமர்ந்து கொண்டு அறிக்கை விடக்கூடாது என அண்ணாமலை விமர்சிக்கிறார். யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். தலைவர் விஜய் வழியில் அவரது அறிவுறுத்தல் படி மக்கள் சேவை செய்வது தான் எங்களின் நோக்கமே. அண்ணாமலை கருத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.