தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விஜய் நடித்த பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு சீமான் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனிலும் சீமான் ஆஜராகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த புகாரை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கேள்வி எழுப்பிய நீதிபதி, “இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்..? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது, காவல்துறை தரப்பில், இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு என தெரிவித்தார்.
அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.