நிற பாகுபாட்டாலும் பாலின பாகுபாட்டாலும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டது விவாத பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், “தலைமைச் செயலாளராக எனது பணிப் பொறுப்பு குறித்து நேற்று ஒரு சுவாரஸ்யமான கருத்தைக் கேட்டேன். என்னுடைய பணிக்காலம் இருளில் இருப்பது போல் உள்ளதாகவும், எனது கணவரின் பதவிக்காலம் பிரகாசமாக இருப்பது போன்று உள்ளதாக சொன்னார்கள்.
நான் கருப்பாக இருப்பதை சுட்டி காட்டுகிறார்கள். அது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று போல. நான் நல்ல நிறத்தில் இல்லை என மற்றவர்கள் சொல்லி சொல்லி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து வாழ்ந்து வருகிறேன். அதை ஏற்றுக்கொண்டு, கருப்பு நிறத்தில் அழகையோ மதிப்பையோ காணவில்லை. வெள்ளை நிற தோலால் ஈர்க்கப்பட்டேன். நான் அப்படி இல்லாததற்கு நான் ஒரு தாழ்ந்த நபர் என்று எண்ணினேன். தான் குழந்தையாக இருந்ததிலிருந்தே தனது கருமையான நிறத்தால் தன்னை ஒரு தாழ்ந்த நபராக உணர்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில விஷயங்களை நான் விவாதிக்க வேண்டியது அவசியம் என தன் நலன்விரும்பிகள் கூறியதன் அடிப்படையில் மீண்டும் இப்போது இந்த பதிவை வெளியிட்டுள்ளதாக சாரதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுடன் இது குறித்து பேசிய அவர், என்னை என் கணவருடன் ஒப்பிடுவது சகஜம். ஆனால், கருப்பு வெள்ளை என நிற ரீதியாக அதைச் செய்வது வருத்தம் அடையச் செய்தது. கருப்பு நிறத்திற்கு எதிரான பாகுபாட்டிற்கு எதிராக யாராவது போராட முடிந்தால், அது என்னால் தான் முடியும்.
இந்தப் பதவியில் அமர்ந்து அதை செய்ய வேண்டும். எனவே தான் பேஸ்புக்கில் அப்படி எழுதினேன். கருப்பு என்பதும் அழகுதான் என்பதை தனது குழந்தைகள்தான் தனக்கு புரிய வைத்ததாகவும் தெரிவித்தார். கருப்பு நிறத்தை வைத்து இழிவுப்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், கருப்பு என்பது மிகவும் சக்திவாய்ந்த துடிப்புமிக்க நிறம் என்று தெரிவித்துள்ளார். தலைமை செயலராக இருந்த தனது கணவர் வேணு ஓய்வு பெற்றதை தொடர்ந்து அப்பதவியில் சாரதா முரளீதரன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் பேசியது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: பழைய ஏசிக்கு பணம் பெறலாம்.. மத்திய அரசு பலே திட்டம்..!! அன்லிமிடெட் சலுகைகள்.. யாரு விடுவா..?