எல்-நீனோ காலகட்டம் என்பதால் வெப்பம் அதிகமாக உள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 6-ம் தேதி வரை வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; தமிழகத்தில் மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும். தருமபுரி, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும். கரூரில் இயல்பை விட ஏழு சதவீதம் அதிகமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களும் கோடை காலங்கள். இந்த காலக்கட்டத்தில் பொதுவாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும், இது எல்-நீனோ (El-Nino) இருக்கக்கூடிய காலகட்டம். அதைத் தவிர்த்து, ஆங்காங்கே ஏற்படும் மாற்றத்தால் லோக்கல் எஃப்க்ட் (Local effect) ஏற்படும். வட மேற்கு மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. மே 6-ம் தேதி வரை வெப்ப அலைக்கான வாய்ப்புகள் உள்ளது.
கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரையில், 35 டிகிரி முதல் 36 டிகிரி வரை இருந்தாலும் காற்றில் ஈரப்பதம் இருக்கும். இரண்டும் கலப்பதால் அசௌகரியம் ஏற்படும். தற்போதைய நிலவரப்படி, 6-ம் தேதி வரை வெப்பம் தொடரும். கடலோர மாவட்டங்களில் கோடை மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.