மார்ச் 5ஆம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, மார்ச் மாதம் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல, பாமக பங்கேற்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்றும் நாங்கள் தனியாகவே போராடிக் கொள்கிறோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல், டிடிவி தினகரனின் அமமுக பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், மார்ச் 5ஆம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அறிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்காத காரணம் பற்றி முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து புரளி பரப்பி வருகின்றனர். விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்று சொல்லிவிட்டோம். அதுபற்றி புரிந்து கொள்ளாமல் மக்களையும் சேர்த்து குழப்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசாமல், திசை திருப்புகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்திலும் திமுக இப்படித்தான் குழப்பி வந்தது.
தெளிவாக விளக்கம் அளித்த பின்பும் அனைத்துக் கட்சிக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது..? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வது காங்கிரஸ் கட்சியின் திட்டம் தான். அரசியலில் இருந்து வைகோ போன்றவர்கள் ஓய்வு பெற வேண்டும். ஆட்சியை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் முதல்வருக்கு இல்லை. ஏதாவது ஒரு கட்சியை குறை கூட வேண்டுமென்றே முதல்வர் ஸ்டாலின் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.