சென்னையில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 321 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களில் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். அதையும் மீறி, நிறுவனங்கள் விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் வேலைக்கு வரும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது மாற்று விடுப்பு வழங்குவது கட்டாயமாகும்.
அந்த வகையில், ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினம் சென்னையில் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சட்டப்படி விடுமுறை அளிக்கப்பட்டதா என சென்னை மாவட்ட முதல், இரண்டாம், மூன்றாம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், 321 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையாக விடுப்பு அளிக்கவில்லை என்பதும் பணிக்கு அமர்த்திய தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்குவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்கள், கடைகள் மீது வழக்குப்பதிவு அல்லது அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.