fbpx

Aadi 2024 : ஆடி மாதத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்புகள்..!! ஆடியில் வரும் விசேஷங்கள் என்னென்ன?

சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

வேப்பமரம்: 

அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார். அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.

ஆடி மாத பிறப்பு: 

ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. உயிர்களைக் காக்கும் சூரியன் தன் பயணத் திசையை இம்மாதத்திலிருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிக் கொள்கிறார். ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார்.

ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை உள்ளது. பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும்.எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.

ஆடி பண்டிகை: 

தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது. மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.

திருமண வரம்: 

ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி அமாவாசை: 

ஆடி மாதத்தில் சந்திரன் தனது சொந்ந வீட்டில் இருக்கிறார். அப்போது சூரியனுடன் தொடர்பு ஏற்படும் நாள் ஆடி அமாவாசை நாளாகும். முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும். அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

ஆடிப்பூரம்: 

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.

ஆடி பதினெட்டாம் பெருக்கு:

 ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி கிருத்திகை: 

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

ஆடி தபசு: 

ஆடி அமாவாசை போல ஆடி பவுர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில்தான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலையில் புன்னைவனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும் என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இறைவன் ஆடி பெளர்ணமி அன்று பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார்.

கடைசி ஆடி: 

ஆடி மாதம் முதல்நாள் எப்படி சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அதே போல ஆடி மாத கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும். ஆடி மாதம் கடைசி நாளில் மாலை வேளையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். முன்னோர்கள் நம் படையலை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை.

Read more ; தேசிய ஆசிரியர்கள் விருது 2024-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

English Summary

Why so many specials for Audi month..!! What are the features of Audi?

Next Post

இந்தியா மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த சீனா திட்டம்!. POK-ல் 13000 அடி உயரத்தில் ராணுவ தளம்!.

Wed Jul 17 , 2024
China plans to launch a major attack on India! Army base at 13000 feet in POK!.

You May Like