ஈரான் அதிபர் ரைசி மரணத்தை அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள்.
ஈரான் – அசர்பைஜான் இடையே ஓடும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து பிரம்மாண்ட அணை கட்டிஉள்ளன. அசர்பை ஜானின் கோமர்லு நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற திறப்பு விழாவில், ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரைசி, அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியெவ் உள்ளிட்டோர் பங்கேற்று அணை மதகுகளை திறந்துவைத்தனர். விழாவை முடித்துக் கொண்டு 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் புறப்பட்டனர்.
டேப்ரிஸ் நகரில் 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், ஈரான் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மட்டும் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்து மாயமானது. மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கிடப்பதை துருக்கியின் ட்ரோன் நேற்று முன்தினம் இரவு கண்டுபிடித்தது. ஈரானின் ஐஆர்ஜிசி படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த அதிபர் உள்ளிட்ட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதிபரின் மரணத்தை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள பெண்களில் ஒருவர், சர்வாதிகாரியும், பழமைவாதியுமான இப்ராஹிம் ரைசியின் மரணத்தை நாங்கள் யாரும் கொண்டாடவில்லை. ஆனால், அவருக்கு இரங்கல் செய்தி தெரிவிக்கப் போவதில்லை என கூறியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் ரைசி மரணம் அடைந்திருப்பார் என்ற ஈரான் மக்களின் நம்பிக்கை பலிக்கட்டும் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல ஒரு சில மக்கள் இனிப்பு வழங்கியும் அவரது மரணத்தை கொண்டாடி, அதன் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.