தமிழ்நாடு முழுவதும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று, விடுப்பில் சென்றவர்கள், வார விடுமுறையில் இருந்தவர்கள், முன் அனுபவம் இல்லாதவர்களை வைத்து பேருந்தை இயக்கப்பட்டது.
இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. பொங்கலின் போது மக்களுக்கு ஏன் இடையூறு கொடுக்க வேண்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரிக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களின் நலன் கருதி இந்தப் போராட்டத்தை இந்த மாதத்தின் பிற்பகுதியில் தள்ளி வைக்க முடியுமா? எனும் விளக்கத்தை போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.