நிதி நெருக்கடி காரணமாக சுமார் 18,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் அதிரடி முடிவை அமேசான் நிறுவனம் எடுத்திருக்கிறது.
உலகம் முழுவதும் ஆன்லைனில் மூலம் கோடி கோடியாக குவிக்கும் ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான்களில் முக்கியமான நிறுவனம் அமேசான். இந்த தளத்தில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம். ஆன்லைன் கரம் பரப்பி பட்டி தொட்டியிலும் கூட பொருட்களை டெலிவரி செய்யும் திறன் படைத்து ஆண்டுக்கு உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்கிறது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் பதினைந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது.

இப்படி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரம்மாண்டமான இந்த நிறுவனம் தற்போது எடுத்திருக்கும் ஒரு முடிவால் அதன் ஊழியர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆம், அமேசான் நிறுவனம் சுமார் 18,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப உள்ளது. நிதி நெருக்கடியால் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டி ஜெஸி கூறியுள்ளார். ஆட்குறைப்பு தொடர்பாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 10,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 18,000 உயர்ந்திருக்கிறது. வேலையிழப்பு எண்ணிக்கை ஐரோப்பிய பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலை இழக்கும் தங்கள் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக ஆன்டி ஜெஸி கூறியிருக்கிறார். யாரெல்லாம் வேலை இழக்கிறார்கள் என்கிற விவரங்கள் ஜனவரி 18 ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது அமேசான் நிறுவனம்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான பெரிய நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பின. பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்தன. ஆனால், தற்போது ஆண்டுக்கு ஆண்டு தொழிலில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையிலும் கூட ட்விட்டர், அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வது உலகளாவிய வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும் என்று கவலை தெரிவித்திருக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அண்மையில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனே ஏராளமான ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இப்போது இப்படி ஒரு அதிர்ச்சி முடிவை அமேசான் எடுத்திருக்கிறது. கொரோனா காலத்தில் அதாவது 2020ஆம் ஆண்டு அமேசான் நிறுவனம் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தியது. இரண்டே ஆண்டுகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.