கார் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித். இவரது
மனைவி ரிஷா. இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கண்ணூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ரிஷாவுக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கணவர் தனது காரில் மனைவியை முன் இருக்கையிலும், உறவினர்கள் நான்கு பேரை பின் இருக்கையில் அமர்த்திக் கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, கார் மருத்துவமனை அருகே வரும் போது திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதில் பின் இருக்கையில் இருந்தவர்கள் பிரஜித் கதவை திறந்து வெளியேற்றிய நிலையில், முன் இருக்கையில் அமர்திருந்தவர்கள் வெளியேற முடியாமல் காருக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 90% தீக்காயம் அடைந்த தம்பதிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கார் தீப்பற்றி விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையின் அருகிலேயே விபத்து நிகழ்ந்ததால், அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.