கணவனைக் கொன்று பழைய அட்டைப் பெட்டிகள், பழைய காகிதங்களை போட்டு வீட்டிலேயே எரித்திருக்கிறார் மனைவி. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் பட்டி கொண்டா பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணய்யா. இவரின் மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் அரசு மருத்துவராக உள்ளார். மற்றொரு மகன் லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த முதியவரான தனது கணவரை கொலை செய்து வீட்டிலேயே பழைய அட்டைப்பெட்டி, பழைய காகிதங்களைப் போட்டு மனைவி லலிதா எரித்துள்ளார். முதியவரின் உடல் 80 சதவிகிதம் எரிந்து போய் இருந்திருக்கிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், லலிதாவிடம் விசாரணை நடத்திய போது, உடல் நலக்குறைவினால் கணவர் காலமாகிவிட்டார். அக்கம்பக்கத்தினர் யாரும் உதவிக்கு வராததால் அவரது உடலை வீட்டிலேயே வைத்து எரித்தேன் என்று கூறியிருக்கிறார். லலிதா மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம். இதனால் அவர் உடல் நோய்வாய் பட்டு இருந்த கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து லலிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.