ஒடிசாவில் சைபர் மோசடியில் பணத்தை இழந்த மனைவியை ‘முத்தலாக்’ செய்த கணவர் மீது வழக்குப் பதிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஏப்ரல் 1-ஆம் தேதி புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில் சைபர் மோசடியில் ரூ.1.5 லட்சம் பணம் இழந்ததாகவும் இந்தத் தகவலை தன் கணவரிடம் தெரிவித்ததால் அவர் முத்தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவர் வரதட்சணை கேட்டும் தன்னை துன்புறுத்தியதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் கணவர் மீது, முஸ்லிம் பெண்களின் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கேந்திராபாரா காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முத்தலாக் நடைமுறை மீது தடை விதித்தது. இதன்படி, இந்தியாவில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.