குடும்பத் தகராறில் கணவன் மீது பெட்ரோலை ஊற்றி மனைவி தீவைத்து எரித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியின் மேயராக பதவி வகித்து வருபவர் இந்திராணி. இவரது கணவர் பெயர் பொன் வசந்தன். இவரது சகோரர் பொன் விஜய் தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவி இலக்கியாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மனைவி இலக்கியா, கணவர் பொன் விஜய் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பொன் விஜய் வலியால் அலறி துடித்தார். இந்த சம்பவத்தில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனே பொன் விஜய்யை மீட்டு அவசர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி இலக்கியாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.