கணவனின் தோல் கருப்பாக இருப்பது குறித்த மனைவியின் இனவெறிக் கருத்துகள் கொடுமையானது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் விவாகரத்து கேட்டு 2012ம் ஆண்டு பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்தமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவில், தான் கருப்பாக இருப்பதை காரணம் காட்டி, தனது மனைவி தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாகவும், வரதட்சணை கொடுமை, வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளிட்ட பொய் புகார்களை கூறி தன்னை விட்டு பிரிந்து சென்றதாகவும், பின்னர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, விசாரணையில் கணவர் கருப்பாக இருப்பதால் அவரது மனைவி இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அலோக் ஆராதே, ஆனந்த் ராம்நாத் ஹெக்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவனின் தோல் கருப்பாக இருப்பது குறித்த மனைவியின் இனவெறிக் கருத்துகள் கொடுமையானது. இதுவே அவர் குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காமல் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு வலுவான காரணமாகும் என்று தெரிவித்தது. எனவே இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.