இந்தியாவில் மிகப்பெரிய குவிக் காமர்ஸ் தளமாக இருக்கும் பிளிங்கிட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் காய்கறி ஆர்டர்களுடன் இலவசமாக கொத்தமல்லி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சம் எப்படி உருவானது என்பது தான் சுவாரஸ்யமான கதை. பிளிங்கிட் செயலியில் காய்கறிகள் ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர், கொத்தமல்லிக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பொதுவாக காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கும்போது, இலவசமாக கொத்தமல்லி வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், ஆன்லைன் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஷாப்பிங் செயலிகளில் அப்படி நடக்காது. இந்த நிலையில் கொத்தமல்லியை காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்பதை கேட்டு இந்த வாடிக்கையாளரின் தாயார் ஆச்சரியமடைந்தார். இதை அந்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளமான X-ல் பகிர்ந்து கொண்டார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக குறிப்பிட்ட அளவு காய்கறிகளை வாங்கும்போது இலவசமாக கொத்தமல்லி வழங்கும் ஒரு சலுகையை பிளிங்கிட் வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த பதிவு காடு, மலை எல்லாம் சுத்தி பிளிங்கிட் நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சாவின் கவனத்திற்கு சென்றது. “பிளிங்கிட்டில் கொத்தமல்லி இலவசமாக இல்லை என்பதை பார்த்ததும் அம்மா கிட்டத்தட்ட மயக்கமடைந்து விட்டார்,” என்று அவர் X-ல் எழுதியிருந்தார். இதை பார்த்து மனமிறங்கிய Blinkit சிஇஓ உடனே ஒரு முடிவை எடுத்தார்.
இந்த வாடிக்கையாளரின் பதிவை தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கருத்துக்களை மதிக்கும் விதமாக பிளிங்கிட் சிஇஓ அல்பிந்தர் திண்ட்ச, உடனடியாக அவருடைய பரிந்துரைக்கு பச்சைக் கொடி காட்டினார். மே 16, 2024 அன்று X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்ட சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா “இலவச கொத்தமல்லி ஆஃபர் இப்போது செயல்பாட்டில் உள்ளது!.
அனைவரும் தயவுசெய்து அங்கித்தின் அம்மாவுக்கு நன்றி சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டு, காய்கறிகள் சிலவற்றையும் இலவச கொத்தமல்லியையும் கொண்ட பிளிங்கிட் கார்ட்டின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்தார். இது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றது. லட்சக் கணக்கான வியூஸ், ஆயிரக் கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக் கணக்கான ரிப்ளைகளை அந்த ட்வீட் பெற்று வருகிறது.