தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதே அரசியல் கட்சிகள் ஆரம்பித்து விட்டன. கூட்டணி குறித்த அறிவிப்புகள் இப்போது வெளிவர தொடங்கியுள்ளன. 2019, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி உடைந்தது. அதிமுக, தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனின் அமமுக கட்சிகள் அங்கம் வகித்தன. இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் இணையாது என கருத்து நிலவிய நிலையில், திடீரென அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. இதனால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறி வந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனி கட்சியாக உள்ளது.
அதிமுகவை ஒன்று சேர்ப்பது என்பது இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்ளும், பிரச்சனை என்பதால், அந்த முடிவில் இருந்து தினகரன் பின்வாங்கியதாக தெரிகிறது. இதன் மூலம் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென குரல் கொடுத்து வருகிறார். இதனால் டிடிவி தினகரன் உடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிகிறது.
இந்த பரபரப்பான சூழலில் தான், ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி கட்சியாக தொடங்கினாலும், எடப்பாடிக்கு ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் இல்லையாம். இருவரையும் சமாதானம் செய்து விடலாம் என பாஜக தலைமை நம்புவதாகவும், அதுவரை ஓபிஎஸ் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தும் ஓபிஎஸ் தரப்பு, தனிக்கட்சி ஒன்றை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், ஒருவேளை பாஜக, எடப்பாடி பழனிசாமிக்காக எங்களை கைவிட்டால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தேர்தலை சந்திக்க ஓபிஎஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாஜக தலைமை ஓபிஎஸ்-ஐ அவ்வளவு எளிதாக விட்டுவிடாது என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.