பைபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி பைபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இது தீவிர புயலாக மாறி, மிக தீவிர புயலாக மாறியுள்ளது. இது, மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறிய நிலையில் நேற்று முன் தினம் சூப்பர் புயலாக மாறியது. இது வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டுள்ளது. பைபர்ஜாய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், 15ஆம் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி- பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், குஜராத்தில் அரசு சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புயல் காரணமாக 67 ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. குஜராத் மேற்கு ரயில்வே பிராந்தியத்தில் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அரபிக் கடல் ஆக்ரோஷமாக இருப்பதாக வரும் 14ஆம் தேதி வரை தைத்தல் கடற்கரைக்கு யாரும் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது குஜராத் சௌராஷ்ட்ரா , கச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வரும் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக வலுவிழந்தே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயலால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என சொல்லப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.