ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து பலமுறை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அமலாக்கத்துறை சார்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி திடீரென தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், “செல்வாக்கு மிக்கவராக செந்தில் பாலாஜி இருப்பதால், ஜாமீன் கிடைத்தால் அவர் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்” என தெரிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு” எனவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. மேலும் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாததால், சந்தர்ப்ப சூழ்நிலை மாறி உள்ளது. வெளிநாட்டுக்கு தப்பிவிடுவார் என்று சந்தேகப்பட்டால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன” என குற்றம் சாட்டினார். அப்போது அமலாக்கத்துறை சார்பில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை துவங்க விடாமல் செந்தில் பாலாஜிதான் தாமதப்படுத்தி வருகிறார். விரைவில் விசாரணையை துவங்க உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (பிப்ரவரி 15) வழக்குவதாக நீதிபதி கூறினார்.