அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ள நிலையில், இதன் தாக்கம் இந்தியாவில் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் வெகுவாக அதிகரித்துள்ளார். இறக்குமதி வரி அதிகரிப்பால் இந்தியாவில் உள்ள ஐடி துறை மற்றும் ஸ்டார்ட் அப் துறைகள் பெரும் பாதிப்பைச் சந்திக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “அமெரிக்காவில் உற்பத்தி என்பது வெகுவாக குறைந்துள்ளது. 50 வருடங்களாக உற்பத்தி பெருமளவில் அங்கு செய்யப்படுவதில்லை. இறக்குமதி வரியை அதிகரித்தால் மற்ற நாட்டினர் அமெரிக்காவில் உற்பத்தியை தொடங்குவார்கள் என்று அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அதனால், அமெரிக்காவுக்கு நல்லது நடக்கும் என்ற நினைக்கிறார். வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இனி அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் டிரம்பின் எண்ணமாக உள்ளது.
அனைத்து பொருள்களையும் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்று தவறாக கருதி டிரம்ப் இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார். தேர்தலின்போது, விசா இல்லாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிதான் டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவில் 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் ரெசிஷன் (பொருளாதார மந்தநிலை) வருவதற்கான வாய்ப்புள்ளது. அப்படி வந்தால் இந்தியாவில் உள்ள ஐடி துறைகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.
ஏஐ வந்த பின் லோயர் லெவல் வேலைகள் எல்லாம் பறிபோய்விட்டன. பங்குச் சந்தையைப் பார்த்தால் ஐடி துறை தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மருந்து விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பார்மா துறைக்கு வரி விதிக்கப்படவில்லை. ஆட்டோ உதிரி பாகங்கள் உற்பத்தி செய்வோருக்கு பாதிப்பு ஏற்படும். ஆட்டோ மற்றும் ஐடி துறைக்கு மிகுந்த பாதிப்பு உண்டாகும். அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பணம் வருவதில்லை.
அமெரிக்காவில் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இனி அங்கு விலைவாசி உயரும். விலைவாசி உயர்ந்தால், இன்பிளேசன் கூடும். இன்பிளேசன் அதிகரித்தால் வட்டி விகிதம் ஏற்றுவார்களே தவிர இறக்கமாட்டார். வட்டி விகிதம் ஏறும்போது அவர்கள் ஊரிலேயே பணத்தை வைத்துக் கொள்வார்கள். அதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பணம் வெளிநாடுகளில் இருந்து வராது. ஓயோ, ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் மோசமான நிலையில்தான் உள்ளன” என்று தெரிவித்தார்.