அம்ரேஷ்வர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில் சில்ஹாரா மன்னர் சித்தராஜாவால் கட்டப்பட்டு 1065-ம் ஆண்டு அவரது மகன் முன்னியாக் மூலம் புதுப்பிக்கப்பட்டது. பஞ்சபாண்டவர்கள் தங்களது வனவாச காலத்தில் ஒரே நாள் இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் நம்பப்படுகிறது.
பாண்டவர்கள் கோயிலை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. எனவேதான் கோயில் கருவறையின் மேற்பகுதி இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. மேலும் பாண்டவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல ஒரு கி.மீ நீளத்திற்குச் சுரங்கப்பாதை அமைத்திருந்தனர். ஆனால் பின்னர் இப்பாதை மூடப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் கருவறையில் சிவன் சுயம்புவாக வீற்றிருக்கிறார்.
அனைத்து பக்தர்களும் கோயில் கருவறைக்குள் சென்று சிவனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் சுயம்புலிங்கம் அருகில் அமர்ந்து பூஜைகள் செய்வார்கள். தற்போது தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் வால்துனி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா ஆலயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அம்பர்நாத் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலில் பிற தெய்வங்களின் சந்நிதி இல்லை, சிவன் மட்டுமே வீட்டிருக்கிறார். இந்தக் கோயில் பெரிய அளவில் கவனிப்பு இல்லாமல் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 12 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாக வரவேண்டியது. ஆனால் மொகலாய ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிராவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தையும் இடித்தனர். எனவே இந்தக் கோயில் இருப்பதை வெளியில் பிரபலப்படுத்தாமல் இருந்தனர்.
தற்போது கோயில் மிகவும் மோசமாக இருப்பதால் மாநில அரசு ரூ.43 கோடி செலவில் கோயில் புதுப்பித்தல் மற்றும் வசதி செய்து கொடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. பொதுவாக சிவாலயம் என்றாலே சிவராத்திரிதான் பிரபலம். அந்த வகையில் அம்பர்நாத் சிவன் கோயிலில் சிவராத்திரி விழா நான்கு நாள்கள் அதாவது சிவராத்திரிக்கு முன்பு மற்றும் பின்பு என நான்கு நாள்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும்.
தமிழகத்தில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் ரயில் மார்க்கமாக மும்பை வந்தால் கல்யாண் என்ற ரயில் நிலையத்தில் இறங்கவேண்டும். கல்யாண் ரயில் நிலையத்தில் இறங்கிப் புறநகர் ரயில்கள் மூலம் அம்பர்நாத் செல்லலாம். அம்பர்நாத் ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.