2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறாரா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போது செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி. அதிலும் குறிப்பாக மனதின் குரல் நிகழ்ச்சியில், தொடர்ச்சியாக தமிழ்நாட்டை சேர்ந்த நபர்களை பாராட்டி வருகிறார். அண்மையில் பாப்புவா நியூ கினியா நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்று அந்த நாட்டின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பை வெளியிட்டார்.
திருக்குறளின் மேன்மையும் அது சொல்லும் அறநெறியும் உலகில் வேறு எங்கும் காண முடியாது என்று பிரதமர் பேசியது கவனிக்கத்தக்க வேண்டியதாக அமைந்தது. அது மட்டுமில்லாமல் 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர், இந்தியர்களுக்கான மொழி தமிழ் என கூறினார். இது மட்டுமல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் அழைக்கப்பட்டனர். மேலும், 1947ஆம் ஆண்டு நேருவிடம் கொடுக்கப்பட்ட சோழர் கால செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவினார்.
பிரதமர் தொடர்ச்சியாக தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக உலா வரும் செய்திகள் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு கடந்தாண்டு இறுதியில் ராமநாதபுரத்தில் நடத்தப்பட்ட ஆய்வும் முக்கிய காரணமாக அமைகிறது. தமிழ்நாடு பாஜகவை பொறுத்தவரை பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை முன் வைக்க உள்ளதாக என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பிரதமர் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகிறார். இருந்த போதும் தமிழ்நாட்டில் பிரதமர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக பாஜக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.