நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அதிமுகவின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை திமுக தொடருமா? என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 2022-2023 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், திமுக அளித்த 505 தேர்தல் அறிக்கையான தாய்மார்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், சமையல் எரிவாயு மானியம் 100 ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால், எதுவும் இடம் பெறவில்லை. மின் கட்டண கணக்கீடு பணி மாதந்தோறும் நடைபெறும் என்று கூறினார்கள் அதுவும் இடம்பெறவில்லை. அதிமுக ஆட்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம், மடிக்கணினி, மகளிர் இருசக்கர வாகனம், அம்மா மினி கிளினிக் ஆகியவற்றை திமுக அரசு நிறுத்தியது வேதனைக்குரியது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொடுத்த வாக்குறுதிகளை எதிர்பார்த்ததில் பூஜ்ஜியம் தான், அதேபோல் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் பூஜ்ஜியம் தான். அது மட்டுமல்ல சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, தற்போது பேருந்து கட்டண உயர்வும் வரும். இதனால், பொருளாதாரத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் 3 நாட்களுக்கு முன்பு, வெள்ளம் பாதிப்படைந்த பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பழனி, காங்கேயம் போன்ற பகுதிகளுக்கு சென்றபோது மக்கள் வெள்ளம் போல் திரண்டு, எங்களின் ஒரே நம்பிக்கை வருங்கால முதல்வர் எடப்பாடியார் என்று வரவேற்றனர். இது எடப்பாடியார் மக்களின் மீது வைத்துள்ள அக்கறையை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அதிமுகவின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை திமுக தொடருமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.