இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. 18-வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை இந்த வாக்குப்பதிவு திருவிழா நடைபெறுகிறது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்போடு நடைபெற்று வரும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களை மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்த முறை அதிகளவில் வாக்களிக்க இருப்பதால், அவர்கள் பங்கு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு தகவல் உலா வருகிறது. அதாவது, வேட்பாளர்களில் தங்களுக்கு பிடித்தமானவர்கள் யாரும் இல்லை என்றால் நோட்டாவில் வாக்களிக்கலாம் என்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
இது பல ஆண்டுகளாகவே இருக்கும் நடைமுறை தான். உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்களில் யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை எனும் போது மேலே இருக்கும் யாருக்கும் தான் வாக்களிக்கவில்லை என்பதை 16-வதாக நோட்டாவில் என பதிவு செய்யலாம் கடந்த 2013 ஆம் ஆண்டுதான் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் தங்களுக்கு தேர்வு செய்ய விருப்பமில்லை என்ன வாக்காளர் கருதினால் நோட்டாவில் வாக்களிக்கலாம் அதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதற்கென்று தனியாக ஒரு பட்டனை வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
தேர்தல் ரத்தாகுமா? : நோட்டாவை குறித்து பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, இன்று இதுபோன்ற செய்திகளை அதிக அளவில் பார்க்க முடிகிறது. அதாவது “தேர்தலில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்த தேர்தல் ரத்து செய்யப்படும்.. எனவே உங்கள் தொகுதியில் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் நோட்டாவில் வாக்களியுங்கள். எனவே, தேர்தல் ரத்தாகிவிடும்.. மீண்டும் நல்ல வேட்பாளரை அரசியல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தும்” உள்ளிட்ட செய்திகள் பரவி வருகின்றன.
உண்மை என்ன? : ஒருவேளை தேர்தலில் ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்தால் தேர்தல் ரத்தாகுமா? என்றால் அப்படி அல்ல. ஒருவேளை நோட்டாவில் அதிக வாக்குகள் விழுந்தால் தேர்தல் ரத்தாகாது. நோட்டாவுக்கு அடுத்தபடியாக ஒரு வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றிருந்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். நோட்டா என்பது வாக்காளர்களுக்கு வேட்பாளர்களில் யாரையும் பிடிக்கவில்லை என்றால், தாங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் என்பதற்காகவும் 100% வாக்கு பதிவை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
2013 தீர்ப்புக்கு பின்னால் அது வாக்கு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக 49-ஓ என்ற விதியிருந்தது. அதாவது, தங்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால், வாக்குப்பதிவு மையம் சென்று 49-ஓ படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் தாங்கள் வாக்களித்ததாகவும் அதே நேரத்தில் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதையும் அது உறுதி செய்யும். எனவே நோட்டாவில் வாக்களித்தால் தேர்தல் ரத்தாகும் என்பது வதந்தியே.
Read More : வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகனம்..!! இந்த நம்பருக்கு ஒரு ஃபோன் பண்ணா போதும்..!!