இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுவது கட்டுக்கதை என்று மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
மின்சார சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், ”மின்சார சட்டத்தில் எந்த இடத்திலும் இலவச மின்சாரம் பற்றிக் குறிப்பிடவில்லை. 65-வது பிரிவில், மாநில அரசுகள் எந்த தரப்பு நுகர்வோருக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கலாம். சட்டத்திருத்தத்தில் அந்த பிரிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விருப்பப்பட்டால் மானிய விலை மின்சாரத்தையோ, இலவச மின்சாரத்தையோ மாநில அரசுகள் தொடரலாம்.

மின்சார சட்டத்திருத்த மசோதாவைப் பற்றி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், “இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள் மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். மேலும், 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பைத் தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம், குடிசையில் வசிப்போருக்கு வழங்கும் இலவசம் மின்சாரம் என அனைத்தும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும்” என்றார். தமிழக அரசு இவ்வாறு கூறியுள்ள நிலையில், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுவது கட்டுக்கதை என்று மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக்குமார் தெரிவித்துள்ளார்.