fbpx

Ponmudi: தண்டனை நிறுத்திவைக்கப்படுமா?… உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!… டென்ஷனில் பொன்முடி!

Ponmudi: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

திமுக ஆட்சியில் இருந்த 2006 – 2011 கால கட்டத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு விடுவித்தது.

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி தரப்பு வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளது உறுதியாகி உள்ளது என கருத்து தெரிவித்தார். அத்துடன், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.

மேலும், பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறை தண்டனை பெற்றதால் பொன்முடி தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை உடனடியாக இழந்தார். எனினும், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை 30 நாட்களுக்கு நீதிபதி நிறுத்தி வைத்ததால் சிறை செல்வதில் இருந்து தப்பினார்.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சரணடைவதில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விலக்கு அளித்தது. இதனால் சிறை செல்வதில் இருந்து இருவரும் தப்பினர்.

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பினை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதன்பிறகே தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்தனர். வழக்கையும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் பொன்முடிக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தால், பொன்முடி இழந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகள் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இழந்த பதவிகளை எப்படியாவது மீண்டும் பெற வேண்டும் என தீவிரம் காட்டும் பொன்முடி தரப்புக்கு, இன்றைய தினத்தின் உச்ச நீதிமன்ற விசாரணை உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: Lok Sabha தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்ப் புலிகள் கட்சி ஆதரவு..!! தலைவர் நாகை திருவள்ளுவன் அறிவிப்பு..!!

Kokila

Next Post

தாமரை சின்னத்திற்கு எதிராக வழக்கு..!! சீமானுக்கு பதிலடி கொடுத்த Annamalai..!!

Mon Mar 4 , 2024
”பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவேன்” என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாததற்கு பாஜகவை விமர்சித்தார். இந்நிலையில் தான் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதற்கு நாம் தமிழர் கட்சி தான் காரணம் எனக்கூறி அதன் பின்னணி பற்றி அண்ணாமலை விளக்கியுள்ளார். விரைவில் நாடாளுமன்ற […]

You May Like