தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், 2025-26ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மார்ச் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய அறிவிப்பில் உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்படும் என்றும் குறிப்பாக மகளிரை கவரும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள், மும்மொழிக் கொள்கை பிரச்சனை, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது, அரசு ஊழியர்கள் பிரச்சனைகள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் தொடர்பாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.