கோடைக்கால சீசன் மாம்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.
கோடை காலத்தில் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வகையில் அதற்கு ஏற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். கோடைக்காலம் தொடங்கியதுமே மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். சாலையோரங்கள் மற்றும் மார்க்கெட்டுகளில் கண்ணை பறிக்கும் வகையில் குவியல் குவியலாக மாம்பழங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். இதனை சாப்பிடுவதால் இதயம், புற்றுநோய் செரிமான பிரச்சனை மற்றும் விந்தணு உற்பத்தி வரை பெரிதும் உதவுகிறது. மாம்பழங்களுக்கு வயிற்று சுத்திகரிப்பு பண்புகள் உள்ளதால், செரிமான பிரச்சினைகளை போக்கும். உண்மையில் இவை சிறந்த மற்றும் இயற்கையான மலமிளக்கியாகவும் விளங்குகிறது. அதனால் மாம்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது.
இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உட்கொள்வது இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். உண்மையில், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மாம்பழத்தில் நிறைந்துள்ள நியூட்ராசூட்டிகல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மாம்பழம் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. மாம்பழத்தின் பழத்தின் சாறில் கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவையெல்லாம் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போரிட்டு அதன் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. பாலுணர்வுக்கான கூறுகள் உள்ள மாம்பழம், தம்பதிகளிடையே உடலுறவுக்கான விருப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், மாம்பழங்களில் உள்ள வைட்டமின்-E மற்றும் பீட்டா கரோட்டின் கலவையானது விந்து அழிவைத் தடுக்கிறது.