திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கட்டுமானத் தொழிலில் சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். மேலும், இவர் தனது கணவரைப் பிரிந்து 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்ணனூரில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பெண்ணுக்கு வேலையில்லை என்பதால், பட்டாபிராம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அர்ஜூனனும் வந்துள்ளார். பின்னர், அப்பெண்ணுக்கு துணி எடுத்து தருவதாகக் கூறி அர்ஜூனன் அழைத்துள்ளார். வர மறுத்த பெண்ணை சமாதானம் செய்து அர்ஜூனன் திருவள்ளூர் அழைத்து சென்றுள்ளார். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இரவு 8 மணியளவில் 6வது நடைமேடை அருகில் பெண்ணை அழைத்துச் சென்ற அர்ஜூனன், கஞ்சா போதையில், நான் அழைத்தால் வரமாட்டியா என கேட்டவாறு கையில் வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை முகம், தலை, மற்றும் மார்பு பகுதியில் அர்ஜூனன் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனையடுத்து 9 மணியளவில் அந்தப் பெண் உடலில் ஆடை எதுவும் இல்லாமல் வெட்டுக் காயங்களுடன் ரயில் நிலையம் நோக்கி ஓடி வந்துள்ளார். இதனைக் கண்ட ரயில்வே போலீசார், பெண்ணுக்கு ஆடையை அணிவித்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம், கை கால் என உடல் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்ணுக்கு வெட்டுக்காயம் இருந்தது. மருத்துவமனையில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் பழனி, பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். சித்தாளாக வேலை பார்த்த இடத்தில் பழக்கமான அர்ஜூனன், எனக்கு துணி எடுத்துத் தருவதாகக் கூறி அழைத்து வந்தார். கஞ்சா போதையில் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அதனை நான் தடுத்தபோது என்னை கத்தியால் வெட்டினார் என போலீசாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அர்ஜூனனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.