முகநூலில் ஏற்பட்ட காதல் தொடர்பான பிரச்சனையில் சிறுமி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலா அருகே வடசேரி கரையைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமி சம்பவத்தன்று நள்ளிரவில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அப்போது, சிறுமியை பார்த்து கதறி அழுத பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தன்னுடைய இந்த நிலைக்கு காரணம் குறித்து சிறுமி பெற்றோர்களிடம் தெரிவிக்கையில், முகநூலில் மூழ்கி இருந்த சிறுமி அதன் வாயிலாக வந்த நட்பு அழைப்புகளை ஏற்றுக்கொண்டு ‘சாட்டிங்’ செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு என்ற இளைஞர் முகநூல் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்டு பின்பு காதலிப்பதாகக் கூறியுள்ளார். சிறுமியும் அந்த இளைஞரைக் காதலிப்பதாக தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி மற்ற சில நபர்களுடன் முகநூல் பக்கத்தில் பேசியதாக சந்தேகப்பட்ட இளைஞர் கோபு ‘அகில்’ என்ற வேறொரு போலியான முகநூல் பக்கத்திலிருந்து அச்சிறுமியை தொடர்பு கொண்டுள்ளார். அந்த போலி முகநூல் பக்கத்தில் இருந்து சிறுமியிடம் பேசி அவரைக் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனையும் அந்த சிறுமி ஏற்றுக் கொண்டதால் ஆத்திரமடைந்த கோபு, அச்சிறுமியைக் காண நேரில் வருகிறேன் எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

சிறுமியும் அதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், நள்ளிரவில் வீட்டிற்கு அருகே வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நள்ளிரவு ஒன்றரை மணியளவில் அச்சிறுமியின் வீட்டிற்கு வந்த கோபு வெளியே தலையில் ஹெல்மெட் அணிந்தபடி காத்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமி அகில், என நினைத்துக் கொண்டு இளைஞரின் ஹெல்மெட்டை கழற்றச் சொல்லியுள்ளார். ஹெல்மெட்டை கழற்றிய உடன் அது கோபு என்பதை தெரிந்துகொண்டார். ‘காதலன் தான் இருக்க மற்றவர்களைச் சந்திப்பதற்காக நள்ளிரவில் வீட்டை விட்டு வரும் அளவிற்கு உனக்கு தைரியமா?’ என ஆத்திரம் கொண்ட கோபு, தான் கொண்டு வந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இறுதியில் பெற்றோர்களால் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.