fbpx

“இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு.. எதிரிகளை வெல்வோம்.. வாகைப் பூ மாலை சூடுவோம்..!!” – தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில்.

கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம். மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான், கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். இதோ, இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று. நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது, மக்களரசியல் மட்டுமே.

தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான், தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழக உறுப்பினர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை உருவாக்கும் இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல். இந்த வேளையில், கட்சியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, நமது வலிமையை நாட்டுக்குப் பறைசாற்றி, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம். அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும்.

மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான், தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/tvkvijayhq/status/1885898947312382003

Read more : தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா… இன்று கட்சியில் இணையும் மற்றொரு முக்கிய அரசியல் தலைவர்…?

English Summary

With the strength of double war elephants.. let’s defeat the enemies.. let’s make a flower garland..!!

Next Post

தினமும் காலை உணவுக்கு ஓட்ஸ் கஞ்சி.. சீக்கிரமே வெயிட் குறையும்..!! செமல்ல 

Sun Feb 2 , 2025
Will eating oats in the morning help you lose weight?

You May Like