இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29 லட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு ஏ.ஆர்.ரகுமான் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பேருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்குடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், மேலும் 15 நாட்களில் ரூ.10கோடி மான நஸ்ட ஈடு வழங்குவதுடன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் புகார்தாரருக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பணம் பெற்றுகொண்டார், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகும் அவர் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கங்களை கேட்டு விசாரணை நடத்தி வந்தது.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 26 மற்றும் 30ம் தேதிகள் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவருக்கு முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் அனுமதி பெறாததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலும் முன் தேதியிட்ட காசோலை வழங்கியதாகவும், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாதது தெரிய வந்தது.
மேலும், இது தொடர்பாக பலமுறை தொடர்புகொண்டும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்ட முன்பணம் திரும்ப தரவில்லை என புகாரில் கூறியதுடன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.