ஹசன் எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா, தனது தாயை பலாத்காரம் செய்து, வீடியோ காலில் தன் ஆடைகளை கழற்ற வேண்டும் என மிரட்டியதாக மேலும் ஒரு இளம்பெண் போலீஸில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், ஹசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா (33). முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர், தனது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆதரவுடன் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவாக பதிவு செய்து வன்கொடுமை செய்த புகாரில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா, அவரின் தந்தை எச்.டி ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) விடம் பெண் ஒருவர் அளித்த புகாரில்,“என் அம்மா எச்.டி.ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார். பலமுறை எச்.டி. ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரால் எனது தாயார் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
பிரஜ்வால் ரேவண்ணாவும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால், கணவரின் வேலையைப் பறிப்பேன், அவரை வேலையில்லாமல் ஆக்கிவிடுவேன், மகளை பாலியல் வன்கொடுமை செய்வேன் என பிரஜ்வல் ரேவண்ணா என் அம்மாவை மிரட்டி வந்தார். என் அம்மா நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார்.
நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு மட்டுமே எங்களை அழைத்து பேசுவார். பகலில் எங்களுடன் பேசுவது அரிது. பிரஜ்வல் ரேவண்ணாவும் எனக்கு போன் செய்து எனது ஆடைகளை கழற்றச் சொல்வார். அவர் அழைப்பை ஏற்காதபோது என் அம்மாவின் மொபைலில் அழைத்து வீடியோ காலுக்கு பதிலளிக்கும்படி என்னை வற்புறுத்துவார். நான் மறுத்தபோது, அவர் என்னையும் என் அம்மாவையும் தாக்குவதாக மிரட்டுவார்” என அந்த பெண் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
தொடர்ந்து பாலியல் தொல்லையும், மிரட்டல்களும் அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் நாங்கள் எங்கள் செல்போன் எண்ணை மாற்றினோம். எனது தாயை அடிமைப் போன்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எனது தந்தையையும் தாக்கினர். பிரஜ்வல் வீட்டில் வேலை செய்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுவரை 3 பெண்கள் மட்டுமே தைரியமாக வெளியே வந்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் 3 பெண்கள் புகார் அளிக்கவில்லை. அவர்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் தான்” என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறினார்.