சென்னையில், ஆசைக்கு இணங்க மறுத்த சித்தாளை, சுத்தியால் தலையில் அடித்து கொத்தனார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (35). கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா (32). இவரும் கட்டிட வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த மாதம் 29-ம் தேதி அன்று எம்.ஜி.ஆர்.நகர் பாரதிதாசன் சாலையில் உள்ள பழைய வீட்டை சீரமைக்கும் கட்டிட வேலைக்காக சரண்யா சென்றார். அப்போது அவருடன் கட்டிட வேலை பார்த்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் வேல்முருகன் (40) பணி முடிந்த பிறகு சரண்யாவிடம் தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவரது ஆசைக்கு இணங்க சரண்யா மறுத்தது மட்டுமல்லாமல் வெளியே சென்று கத்திவிடுவேன் என்று வேல்முருகனை மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த வேல்முருகன் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து சரண்யாவின் பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சரண்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே வேல்முருகன் அங்கிருந்து தப்பித்தார்.
வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்த போது சரண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். வேல்முருகன் திருப்பூரில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.