திருவள்ளூரில் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்த பெண் ஊழியர் உயிரிழப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, நாள் தோறும் சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல், முகவர்களுக்கு பால் அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்பணியில், தரம் பிரித்து, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் நிரப்பப்பட்ட பால் இயந்திரத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட்டில் வெளியே வரும் போது, அதனை அடுக்கும் பணியில், தற்காலிக ஊழியரான உமாராணி என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக உமாராணி அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவும், அவரது தலைமுடியும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. இதனால் உமாராணி தலை இயந்திரத்தில் சிக்கி துண்டாகியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் திருவள்ளூரில் ஆவின் பால் பண்ணையில் வேலை செய்த பெண் ஊழியர் உயிரிழப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
25 ஆண்டுகளாக இயங்கிவந்த இயந்திரத்தில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. கன்வேயர் பெல்டில் பெண் ஊழியரின் துப்பட்டா சிக்கியதே காரணம். பொதுவாக துப்பட்டா அணிய அனுமதிப்பது இல்லை. இனி கோட் போன்ற உடையை அணிவது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.