அரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ரோகித் குப்தா. ஆன்லைனில் டேட்டிங் ஆப் மூலம் சாக்சி என்ற இளம் பெண் ஒருவருடன் இவர் பழகியுள்ளார். இந்நிலையில், இருவரும் பல நாட்களாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். ரோகித் குப்தாவுடன் பேசி வந்த சாக்சி, தனது சொந்த ஊர் டெல்லி என்றும், குருகிராமில் உள்ள தனது உறவினர் வீட்டில் தான் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாக்சி ரோகித்திடம், நான் உன்னை நேரில் சந்திக்க வேண்டும், என்னை வந்து அழைத்து செல் என்று இரவு 10 மணியளவில் கூறியுள்ளார்.
இதன்படி, சாக்சியை பைக்கில் அழைத்து கொண்டு செல்லும் வழியில், ரோகித் அருகேயுள்ள கடையில் மதுபானம் வாங்கி, இருவரும் ரோகித்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர், சாக்சி மதுபானத்தில் கலக்க பனிக்கட்டி (ஐஸ்) எடுத்து வரும்படி ரோகித்திடம் கூறியுள்ளார். இதனால், ரோகித் சமையலறைக்கு சென்ற போது சாக்சி, மதுபானத்தில் மயக்க மருந்து கலந்து வைத்து விட்டார். இது தெரியாமல் ரோகித் அந்த மது பானத்தை குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.
அடுத்த நாள் காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த ரோகித்திற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருடன் இரவில் தங்கிய சாக்சியை காணவில்லை. மேலும், ரோகித்தின் தங்க சங்கிலி, ஐபோன் 14 புரோ, ரூ.10 ஆயிரம் , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளும் காணவில்லை. அதோடு, அந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் உதவியுடன் ரூ.1.78 லட்சம் பணமும் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித் இது குறித்து போலீசில் ரோகித் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.