இயல்பாகவே விழிப்பு வரும் வரையிலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றுதான் நாம் எல்லோருமே விரும்புவோம். ஆனால், பள்ளி-கல்லூரிகளுக்கு அல்லது அலுவலகத்திற்கு செல்வோர் காலையில் அலாரம் வைத்து எழுவார்கள். அதிலும் தினசரி வைத்த அலாரம் ஞாயிற்றுக்கிழமையும் அடித்து விட்டால், பதறியடித்து அதை அணைத்துவிட்டு நாம் தொடர்ந்து தூங்குவோம். அதேபோல நமக்கான நேரம் போதுமானதாக இருந்தால் நமக்கு அலாரம் வைக்கும் பழக்கமே கூட இருக்காது. தவறுதலாக அலாரம் சேமிக்கப்பட்டு ஒலி எழும்பினால் அது நமக்கு தொல்லையாக இருக்கும்.
ஆனால், இதுபோன்ற அலாரம் எதையும் சேமித்து வைக்காத போதிலும் தினசரி காலை 9.25 மணிக்கு அடிக்கும் அலாரம் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுகள் தன்னுடைய தூக்கம் கெட்டு வருகிறது என்று பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் ஆப்பிள் ஐஃபோனை பயன்படுத்தி வருகிறார். ஏஞ்சலே சோஃபியா என்ற இந்தப் பெண் அவருடைய ஃபோனில் இருக்கும் பிரச்சனை குறித்து டிக்டாக் வீடியோ மூலமாக பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவில், “காலையில் 9.25 மணிக்கு எழுந்திருக்காவிட்டால் நான் செத்து விடுவேனா?. அலாரம் எதையும் வைக்காமலேயே நான் தினசரி காலை 9.25 மணிக்கு அதை அணைத்து வைக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒருபோதும் நான் அதற்கு ஏற்பாடு செய்து வைத்தது கிடையாது” என்று கூறியுள்ளார். தவறுதலாக அலாரம் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்குமா என்று பலமுறை ஆய்வு செய்தபோதிலும், அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், ஃபோன் சைலண்ட் முறையில் இருந்தால் அலாரம் அடிப்பதில்லை.
சைலண்ட் முறையில் இல்லாவிட்டால், தினசரி காலை 9.25 மணிக்கு அலாரம் அடிப்பதும், பிறகு அந்தப் பெண் எழுந்து அணைப்பதுமாக இந்த கதை தொடர்ந்து வருகிறது. இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் சோஃபியா புதிய ஆப்பிள் ஃபோன் ஒன்றையும் வாங்கி பார்த்து விட்டார். ஆனால், அதிலும் இதே குறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவன ஊழியர்களிடம் அவர் புகார் அளித்த போதிலும் கூட இதற்கு தீர்வு காண முடியவில்லை. ரீசெட் செய்யுமாறு பலரும் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், புதிதாக 9.25 மணிக்கு அலாரம் ஏற்பாடு செய்துவிட்டு, பிறகு அதை நீக்கினால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரக் கூடும் என்று சமூக வலைதளப் யூசர் ஒருவர் யோசனை தெரிவித்தார். ஆனால், அந்த வகையிலும் தீர்வு ஏற்படவில்லை.
ஃபோனில் உள்ள கடிகாரம், அலாரம், ரிமைண்டர் போன்ற ஆப்களையும் கூட அவர் டெலீட் செய்துவிட்டார். ஆனாலும், கூட இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படவில்லை என்பதுதான் தொழில்நுட்ப உலகை குழப்பத்தில் ஆழ்த்தும் விஷயமாக உள்ளது.