பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர், அந்த பகுதியில் உள்ள பிரமோத் சிங் என்பவரிடம் கடனாக ரூ.1500 பெற்றுள்ளார். இந்நிலையில், பிரமோத் சிங் அந்த ரூபாய்க்கான வட்டியைச் சேர்த்து செலுத்துமாறு, அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் சில நாட்களில் தான் வாங்கிய பணம் மற்றும் அதன் வட்டியையும் பிரமோத் சிங்கிடம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டிற்க்குள் பிரமோத் சிங், அவரது மகன் அன்ஷூ மற்றும் நான்கு கூட்டாளிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, கொடுத்த ரூபாய்க்கு மீறி கூடுதல் பணம் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த பெண் மறுத்ததையடுத்து, பணம் கொடுக்காவிட்டால் நிர்வாணமாக ஊர் சுற்றி வர வைப்போம் என்று மிரட்டியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி தடிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதோடு விடாமல், பிரமோத் சிங்கின் மகன் அன்ஷூ அந்த அப்பாவி பெண்ணின் வாயில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அலறி துடித்த அந்த பெண், அவர்களிடம் இருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பிரமோத் சிங்கையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.