ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி மாரப்பா முதல் வீதியை சேர்ந்தவர் 35 வயதான சென்னியப்பன் (எ). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வரும் இவருக்கு, 26 வயதான கோகிலவாணி என்ற மனைவியும், கோவர்த்தன், கோவர்த்தினி ஆகிய 1½ வயதுடைய இரட்டை குழந்தைகளும் உள்ளனர். கோகிலவாணியின் நடத்தையில் சென்னியப்பனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த கோகிலவாணி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிவகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு, தனது 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், சென்னியப்பன் தனது மனைவி கோகிலவாணியை வீட்டிற்க்கு திரும்பி வந்துவிடுமாறு கூறியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு, கோவர்த்தனை தூக்கிக்கொண்டு கோகிலவாணி தனது கணவர் வீட்டிற்க்கு வந்துள்ளார். ஆனால் வழக்கம் போல், நேற்று பகலில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சென்னியப்பன், வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்த போது கோகிலவாணி தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சென்னியப்பன், வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கி மனைவியின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோகிலவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்த சென்னியப்பன், குழந்தை கோவர்த்தனுடன், ஈரோடு டவுன் காவல் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்துள்ளார். இதையடுத்து, கோகிலவாணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சென்னியப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை கோவர்த்தன், தற்போது போலீஸ் பராமரிப்பில் உள்ளது. பிஞ்சு குழந்தை தாய் இல்லாமல் அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.